Skip to main content

"பாம்புகள் எனது குழந்தைகள்!" - அடைக்கலமளித்து பாதுகாக்கும் புத்த மதத் துறவி!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

wilatha

 

மியான்மரைச் சேர்ந்த புத்த மதத் துறவி விலாதா. 69 வயதான இவர், மியான்மரின் யங்கானில் பாம்புகளுக்குப் புகலிடம் அமைத்து, அவற்றைப் பாதுகாத்து வருகிறார். இவர் அடைக்கலம் தரும் பாம்புகளில், சாதாரண விஷமற்ற பாம்புகள் மட்டுமல்ல, ஆளையே விழுங்கக்கூடிய மலைப் பாம்புகளும், ராஜ நாகங்களும் அடக்கம்.

 

இவர் பாதுகாத்து வரும் பாம்புகள், அவர் மீது ஏறி விளையாடுகிறது. அவரும் பாம்புகளை மடியில் வைத்துத் தடவிக் கொடுக்கிறார். பாம்புகளைத் தனது குழந்தைகள் என்றே கூறுகிறார் விலாதா. இவர் பாம்புகளுக்கு அடைக்கலம் தருவதன் காரணம், அவற்றின் மீதான பாசம் மட்டுமல்ல, அவற்றை அழிவிலிருந்து காக்கும் முயற்சியும் கூட.

 

மியான்மர் நாட்டில், பாம்புகள் பிடிபட்டால் ஒன்று கொல்லப்பட்டுவிடும் இல்லையென்றால் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுவிடும். இதனால், பாம்புகள் அழிவதை தடுக்கத்தான், அவற்றிற்குப் புகலிடம் அளித்துப் பாதுகாக்கிறார் புத்த மதத் துறவி விலாதா. இதுபற்றி அவர் கூறும்போது, மக்கள் பாம்புகளைப் பிடித்துவிட்டால், அவற்றை விற்க வாடிக்கையாளர்களை தேடுவதாகக் கூறுகிறார். மேலும், புத்த மத நாடான மியான்மரில் இப்படி ஒரு சரணாலயம் அமைந்திருப்பதால், மக்கள் பாம்புகளைக் கொல்லாமலோ, விற்காமலோ துறவிகளிடம் தருவதன்மூலம் மேன்மை பெறலாம் எனக் கூறுகிறார் விலாதா.

 

புத்த மதத் துறவி அமைத்துள்ள, இந்தப் பாம்புகள் சரணாலயத்திற்கு, பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் எனப் பலரும் பாம்புகளைக் கொண்டுவந்து தருகின்றனர். அவைகளைப் பாதுகாக்கும் விலாதா, அவைகள் திரும்பக் காட்டிற்குச் செல்லலாம் எனத் தோன்றும்போது காட்டில் கொண்டு சென்று விட்டு விடுகிறார். ஆனாலும், கெட்டவர்களிடம் சிக்கினால் அவர்கள் அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்றுவிடுவார்கள் என்பதால், அவை திரும்பப் பிடிபட்டால் அது தனக்கு வேதனையைத் தரும் எனக் கூறுகிறார் விலாதா.

 


 

சார்ந்த செய்திகள்