Skip to main content

மொராக்கோ நிலநடுக்கம்; 600-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Morocco Earthquake The toll exceeds 600

 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 632 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

 

மொராக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி இதுவரை 632 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மொராக்கோவில் அடுத்தடுத்து 6 முறை சிறிய அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

 

Morocco Earthquake The toll exceeds 600

 

இதற்கிடையில் இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், “மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான சூழலில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.” எனத் தெரிவித்திருந்தார். இதுமட்டுமின்றி டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் மொராக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்