ட்ரம்ப் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை ஏன் உண்மையை மறைக்க வேண்டும்? என அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்புக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும், அதிபர் ட்ரம்ப் கரோனா சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 4 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ட்ரம்ப் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
இந்தச் சூழலில், ட்ரம்ப் உடல்நிலையைக் காரணமாக வைத்து அவரிடம் இருந்து அதிபர் பதவியின் அதிகாரங்களைத் துணை அதிபருக்கு மாற்றும் 25-வது சட்டத் திருத்தத்தைக் கையிலெடுத்திருக்கிறார் நான்சி பெலோசி. இந்நிலையில் ட்ரம்ப் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை ஏன் உண்மையை மறைக்க வேண்டும்? என நான்சி பெலோசி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நான்சி பெலோசி, "வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராக கரோனாவுக்கு இலக்காகி வரும் நிலையில், ஏன் வெள்ளை மாளிகை உண்மையை மறைக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு இதைப்பற்றி தெரிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது" என விமர்சித்துள்ளார்.