கடந்த 15 ஆண்டுகளில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் ட்ரம்ப் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் நிறைவடைய இருக்கிறது. இந்த வருடம் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற இருக்கிற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கிவிட்டதால், தேர்தல் பிரச்சாரங்கள் அமெரிக்காவில் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வருமான வரி மோசடியில் ஈடுபட்டது குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், "ட்ரம்ப் தனது வணிக நிறுவனங்களில் தொடர் இழப்புகள் ஏற்படுகின்றன என்று கூறி வருமானத்தைக் குறைத்துக் காட்டியுள்ளார். கிடைத்த தரவுகளை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட ஆய்வின்படி 2018-ம் ஆண்டில் 434.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், ட்ரம்ப் 47.4 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில், அவர் 10 வருடத்திற்கான வருமான வரியை செலுத்தவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில், ட்ரம்ப் மீது வருமான வரி குறித்தான விமர்சனம் எழுந்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.