சிகாகோவை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவ வலியுடன் தேர்வு எழுதிய சம்பவம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
சிகாகோவை சேர்ந்த பிரியனா ஹில், அங்குள்ள லயோலா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற தனது லட்சியத்தால் பார் கவுன்சில் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தபோது அவர் கருவுற்றிருந்த நிலையில், தேர்வின் தேதி பிரசவத்திற்கு முன்பே வருகிறது என்பதால், தேர்வுக்கு அவர் தயாராகி வந்துள்ளார். ஆனால், கரோனா வைரஸ் காரணமாக இந்த தேர்வு தள்ளிப்போயுள்ளது. இதனையடுத்து, அவர் தேர்வறையில் தேர்வு எழுதிக் கொண்டிருக்கையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஆன்லைன் தேர்வில் யாரேனும் கணினியின் பார்வைக்கு அப்பால் சென்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதால், கணினியை விட்டு நகராத அவர் தனது தேர்வினை தொடர்ந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவருக்குப் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பிரியனா ஹில், "பார் தேர்வு எழுதும் போது நான் 28 வார கர்ப்பிணியாக இருப்பேன் என நினைத்தேன். ஆனால் கரோனா அச்சுறுத்தலினால் தேர்வு தள்ளிப்போனது. இறுதியில் அக்டோபர் 5 மற்றும் 6ஆம் தேதியன்று ஆன்லைன் மூலமாக நாள் ஒன்றுக்கு இரண்டு அமர்வுகளாக மொத்தம் நான்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அந்த தேதியில் நான் பத்து மாதம் கர்ப்பமாக இருந்தேன். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற பதட்டத்தோடுதான் தேர்வை எழுதத் துவங்கினேன்.
நான் பயந்தபடியே முதல் நாள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போதே வலி ஆரம்பித்தது. ஆன்லைன் தேர்வில் யாரேனும் கணினியின் பார்வைக்கு அப்பால் சென்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டது. நான் பல முறை கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டும், அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் நாற்காலியை விட்டு அசையாமல் எனது கணவருக்கு ஃபோன் செய்தேன்.
அவர் வரும்போதே செவிலியரை அழைத்து வந்தார். அவர்கள் என்னை சோதித்து கொண்டிருக்கும்போது நான் தேர்வை எழுதிக் கொண்டிருந்தேன். முதல் நாள் தேர்வை முடித்ததும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன். அன்று மாலை எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் பிரசவ வார்டில் இருந்தபடியே இரண்டாம் நாள் தேர்வினை எழுதி முடித்தேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.