ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து நேட்டோ படைகள் வெளியேறியுள்ள நிலையில், அங்கு தாலிபன்கள் தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்திவருகின்றனர். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியைத் தாலிபன்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர்கள் தினமும் புதிதாக சில பகுதிகளைக் கைப்பற்றிவருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் தாலிபன்களின் ஆதிக்கம் அதிகரித்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தஜிகிஸ்தான் நாட்டில் தஞ்சம் அடைந்துவருகின்றனர். இந்தநிலையில் நேற்று (05.07.2021) மட்டும் 1,037 ஆப்கான் இராணுவ வீரர்கள் தங்களது நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பதாக தஜிகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கான் இராணுவ வீரர்கள், தஜிகிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுவது கடந்த இரண்டு வாரங்களில் இது ஐந்தாவது முறையாகும். இந்த இரண்டு வாரங்களில் 1,600 ஆப்கான் வீரர்கள் தஜிகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
தங்கள் நாட்டின் எல்லையையொட்டி தாலிபன்கள் ஆதிக்கம் அதிகரித்திருப்பதையடுத்து, தஜிகிஸ்தான் பிரதமர் புதிதாக 20,000 இராணுவ வீரர்களை எல்லையில் குவிக்க உத்தரவிட்டுள்ளார். தாலிபன்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அவர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்கின்ற அச்சமும் எழுந்துள்ளது.