ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இன்று காலை முதலே இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது இந்தியா வந்துள்ளார். அவரை இந்தியப் பிரதிநிதிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.