
கரோனா வைரஸால் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளன.
கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 36 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2.5 லட்சத்திற்கும் மேலானவர் இதனால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், இதனால் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட ஐரோப்பிய நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளன.
உலகிலேயே முதன்முதலில் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்த இத்தாலியில் தற்போது, பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இத்தாலி மக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குள்ளாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள், சலூன்கள், ஜிம்கள் மற்றும் பல வணிக நிறுவனங்கள் இன்னும் திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்க வேண்டும் என்ற விதிமுறைகளோடு திறக்கப்பட்டுள்ளன. மேலும், முக்கியமான வேலை, சுகாதாரம் அல்லது அவசரகால சூழ்நிலைகள் தவிர, மற்ற காரணங்களுக்காகப் பிற பிராந்தியங்களுக்கு மக்கள் தேவையில்லாமல் பயணிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன, அதிகபட்சம் 15 பேர் வரை இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதேநேரம், கூட்டம் கூட்டி திருமணங்கள் நடத்துவதற்கான தடை தொடர்கிறது.

ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றொரு நாடான ஸ்பெயினில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர, தென்கொரியா, மலேசியா போன்ற நாடுகளிலும் ஊரடங்கு மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது.