Skip to main content

விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு இங்கிலாந்து பிரதமரின் விநோத பதில்..!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020
boris johnson

 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், இன்றுடன் 15வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

 

இதற்கிடையே, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசிய சீக்கிய எம்.பி. தன்மன்ஜீத் சிங், இந்தியாவில் பஞ்சாப் மற்றும் பிறபகுதிகளில் அமைதியாக போராடி வரும் விவசாயிகள் மீது, கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே நமது பிரதமர், நமது மனதின் கவலைகளையும், இப்போது நடந்து வரும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையையும் இந்தியப்  பிரதமரிடம் தெரிவிப்பாரா?. அவர், ஒவ்வொருவருக்கும் அமைதியாக போராடுவதற்கான அடிப்படை உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவரா? என கேள்வியெழுப்பினார்.

 


இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே நடப்பவைகள் குறித்து நமக்கு கவலைகள் இருக்கிறது. ஆனால், இது இரண்டு நாடுகளும் தீர்த்துக்கொள்ள வேண்டிய முதன்மையான பிரச்சனை என பதிலளித்தார். விவசாயிகளின் பிரச்சனை குறித்த கேள்விக்கு சம்மந்தமே இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் குறித்து பேசிய போரிஸ் ஜான்சனின் பதில் கிண்டலுக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. 

 

 

இந்த சம்பந்தமில்லாத பதிலை சற்றும் எதிர்பாராத பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜீத் சிங்  அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. லண்டன் உட்பட உலகம் முழுவதும், மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது பிரதமருக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாமல், நாட்டிற்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார் என விமர்சித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்