உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 46 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 85,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்த கரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய தன்னுடைய தாத்தா, பாட்டியை கட்டியணைக்க நினைத்த சிறுமி, ஒரு நூதன முறையை கையாண்ட சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஸிண்ட்சே என்ற பெயர் கொண்ட அந்த சிறுமி, தாத்தாவுக்கும் தனக்கும் இடையே ஒரு திரை போன்ற அமைப்பை உருவாக்கி அதில் கட்டிப்பிடிப்பதற்காக பாலித்தீன் பைகளால் கை போன்ற அமைப்பை செய்து அந்த திரையில் ஒட்டியுள்ளார். இதன் மூலம் தாத்தா பாட்டியினை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தாத்தா, பாட்டி இருவரும் தற்போது வீட்டில் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.