அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தனது நாய்களுடன் விளையாடியபோது, கீழே விழுந்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி 20 அன்று அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், ஜோ பைடன் தனது நாய்களுடன் விளையாடியபோது, கீழே விழுந்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெலாவேரின் நெவார்க்கிலுள்ள எலும்பியல் நிபுணரைச் சந்தித்து அவர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். இதில் முதலில் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரேயில் அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதன்பின்னர் எடுக்கப்பட்ட சி.டி. ஸ்கேனில் அவரது கணுக்கால் பகுதியில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சில வாரங்களுக்கு அவருக்கு நடைப்பயிற்சி தேவைப்படும் என்றும் சிறப்பு காலணி ஒன்றை அவர் அணிய வேண்டுமெனவும் அவரது மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.