
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு எதிராக ஒவ்வொரு போராட்டம் நடத்த அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். அந்தவகையில், அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சைக் கண்டித்தும், அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வலியுறுத்தியும் அதிமுக மகளிர் அணியினர் தமிழகம் முழுவதும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், அதிமுக மாணவர் அணி சார்பில் இன்று மாலை 5:30-மணிக்கு தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் உயிரிழந்த மாணவ-மாணவிகள் 22 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தவிருக்கின்றனர். தமிழகத்தின் தலைநகரங்களில் நடக்கும் இந்த போராட்டம், சென்னையில் எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தின் அருகே நடைபெறவுள்ளது.
அதிமுக மாணவர் அணி நடத்தும் இந்த மெழுகுவர்த்தி ஏந்தும் அஞ்சலி போராட்டத்தில், "நீட் தேர்வு ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி விட்டனர்" என்று திமுக ஆட்சியை குற்றம்சாட்டி குரல் கொடுக்கவிருக்கிறார்கள் அதிமுகவினர். எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக அட்டாக் செய்யுங்கள் என்று மாணவர் அணி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.