இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதித்த நான்காவது நாடாக இந்தியா மாறியிருந்தது.
அதிலும் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்தது. இதனையடுத்து நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் விண்கலமான‘ஸ்சிலிம்’ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் நிலவில் வெற்றிகரமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் தரையிறங்கியதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஷா (JAXA) தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த 5 வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஏற்கெனவே 3 முறை இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.