உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் திரை நட்சத்திரம் ஜாக்கிஜான். 67 வயதான இவருக்கு தற்போது அரசியல் ஆசை வந்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் சீன அதிபர் ஜின்பிங் உரையாற்றியிருந்தார்.
இந்தநிலையில், சீன திரைத்துறையினர் சீன அதிபரின் உரை மீதான தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சீன திரைப்பட சங்கத்தின் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கும் ஜாக்கிஜான், "என்னால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்துவத்தை உணர முடிகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, தான் சொல்வதையும் தான் அளிக்கும் வாக்குறுதிகளையும் 100 ஆண்டுகளில் அல்ல, சில தசாப்தங்களிலேயே செய்கிறது. நான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.
ஜாக்கிஜான் கடந்த சில ஆண்டுகளாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்துவருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். 'சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு' என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனைக் குழுவிலும் ஜாக்கிஜான் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.