சீனாவில் வலசை மாறிய யானைகள் கூட்டம், வனப் பகுதியிலேயே கூட்டமாகப் படுத்து ஓய்வெடுத்து தூங்கும் ட்ரோன் புகைப்படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.
சீனாவின் ஜீஸ்ஸ்வாங்பனாடாய் வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய 15 யானைகள், இதுவரை 500 கிலோமீட்டர் கடந்து யுனான் மாகாண தலைநகர் கம்னிங்கிற்கு வந்துள்ளது. சுமார் 9 கோடி பேர் வாழும் இந்த நகரத்தில் வலசை மாறிய 15 யானைகள் அடியெடுத்து வைத்துள்ளன. இந்நிலையில், யானைகளால் யுனானில் வாழும் மனிதர்களுக்கோ அல்லது மனிதர்களால் யானைகளுக்கோ எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர்.
யானைகள் வரும் வழியில் போக்குவரத்தைத் தடை செய்வது, குடியிருப்புப் பகுதிகளில் இருப்பவர்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்துவது போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கேற்றவாறே நகரத்தின் பிரதான சாலையிலேயே பயணிக்கின்றன அந்த 15 யானைகளும். சில நேரங்களில் மட்டும் உணவுக்காக ஊருக்குள் புகுந்து பயிர்களைச் சாப்பிடுகின்றன. வலசை மாறிய யானைகள் இப்படி ஊருக்குள் வருவதைத் தடுப்பதற்காக ஆங்காங்கே பெரிய தொட்டிகள் அமைத்து, அதில் யானைகளுக்குப் பிடித்த உணவுகளை மக்கள் போட்டுவருகின்றனர்.
தற்போதுவரை இந்த வலசை மாறிய யானைகளால் மனிதர்களுக்கோ, மனிதர்களால் யானைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை. யுனானில் உள்ள அடர் வனப்பகுதிக்குள் இந்தப் பதினைந்து யானைகளும் சென்று சேரும்வரை யானைகளைத் தூரத்திலிருந்து கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர் அந்நாட்டு அதிகாரிகள்.