Skip to main content

"டெல்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய உரிமை இருக்கிறது..ஆனால்" - பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிங்கப்பூர்!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

singapore high commissioner

 

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மேலும், மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், சிங்கப்பூரில் சமீபகாலமாகப் பரவிவரும் மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ், குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்றும், அது இந்தியாவில் மூன்றாவது அலையாக வரக்கூடும் என்றும்  அரவிந்த் கெஜ்ரிவால், சிங்கப்பூருடனான விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கு சிங்கப்பூர் சுகாதாரத்துறை, சிங்கப்பூரில் பரவி வருவது இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா என்றும், சிங்கப்பூர் வகை கரோனா என எதுவுமில்லை எனவும் தெரிவித்தது.

 

மேலும், சிங்கப்பூர் அரசு, அந்தநாட்டிற்கான இந்தியத் தூதரை அழைத்து, அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கரோனாவிற்கெதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும் இந்தியாவும் உறுதியான நண்பர்களாக இருந்து வருகின்றன. கரோனா சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கவும் மையமாகவும், ஆக்ஸிஜன் விநியோகஸ்தராகவும் சிங்கப்பூரின் பங்கைப் நன்றி பாராட்டுகிறோம். எங்களுக்கு உதவ இராணுவ விமானங்களை அனுப்பிய அவர்களின் செயல் எங்களிடையே உள்ள சிறப்பான உறவைத் தெரிவிக்கிறது. மேலும் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டியவர்களின் பொறுப்பற்ற வார்த்தைகள் நீண்டகால உறவைச் சேதப்படுத்தும். எனவே நான் தெளிவுபடுத்துகிறேன் டெல்லி முதல்வர் இந்தியாவிற்காகப் பேசவில்லை" எனத் தெரிவித்திருந்தார். 

 

இந்தநிலையில், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங், கெஜ்ரிவால் மீது தங்கள் நாட்டு சட்டப்படி வழக்கு தொடர தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், "இன்று காலை, டெல்லியில் உள்ள ஒரு முக்கிய நபர் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் உண்மைகளை அறியத் தவறிவிட்டார் என்ற கவலையைத் தெரிவிக்க இந்தியத் தூதரை அழைத்தோம். இதனிடையே, கரோனா உருமாற்றம் குறித்துப் பேச டெல்லி முதல்வருக்கு போதுமான திறன் இல்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அதேபோல், கரோனாவிற்கெதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் இந்தியா உறுதியான நண்பர்கள் என்றும், டெல்லி முதல்வர் இந்தியாவுக்காகப் பேசவில்லை என்றும், அவர் கூறிய கருத்துக்கள் பொறுப்பற்றவை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதைக் கேட்டு மகிழ்ந்தோம். 

 

இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். ஏனெனில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பேசியுள்ளனர். அவர்கள் அளித்த உத்தரவாதங்களால் நாங்கள் மனம் மகிழ்கிறோம். டெல்லி முதல்வரின் கருத்துக்கள் கரோனாவிற்கெதிரான நமது (இந்தியா-சிங்கப்பூர்) போராட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சிங்கப்பூரில் தவறான தகவல்களுக்கு எதிராக போஃப்மா சட்டமுள்ளது. அதை டெல்லி முதல்வர் கூறிய கருத்துக்கள் மீது பயன்படுத்த எங்களுக்கு உரிமையுள்ளது. இருப்பினும் இந்திய அரசின் தெளிவுபடுத்தலில் நாங்கள் திருப்தியடைகிறோம்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்