உலகில் தற்போது பரவிவரும் கரோனா வைரஸ் வகைகளில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா அதிக ஆபத்தானதாக கருதப்படுகிறது. இது மற்ற கரோனா வகைகளைக் காட்டிலும், 50 சதவீதம் அதிக பரவல் தன்மையைக் கொண்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் டெல்டா வகை கரோனாவைக் கவலைக்குரிய கரோனா வகையாக அறிவித்தது.
இந்தநிலையில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், டெல்டா வகை கரோனாவைக் கவலைக்குரிய கரோனா வகையாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர், டெல்டா வகை கரோனாவால் தொற்றுகள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்திருந்தார்.
டெல்டா வகை கரோனாவைக் கவலைக்குரியதாக வகைப்படுத்தியுள்ள அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த மையம், டெல்டா வகை கரோனாவின் பரவல் தன்மை அதிகரித்துள்ளது என்றும், டெல்டா வகை கரோனாவிற்கெதிராக, கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயல்திறன் குறைவாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆய்வக சோதனையில், தடுப்பூசிகளின் செயல்திறனும் டெல்டா வகை கரோனாவிற்கு எதிராக குறைவாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.