அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகளான இவான்கா ட்ரம்ப்பின் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 78,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் உதவியாளர் ஒருவருக்கும், துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளர் கேட்டி மில்லருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இவான்கா ட்ரம்ப்பின் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்த உதவியாளருடன் கடந்த மூன்று வாரமாக இவான்கா ட்ரம்ப் பணி நிமித்தமாகத் தொடர்பிலிருந்துள்ளார். இதனையடுத்து இவான்கா ட்ரம்ப்புக்கும், அவரது கணவர் ஜேர்ட் குஷ்னருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.