ஈரானில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஈரான் அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி உறவினர்களைச் சந்திக்கச் சென்ற 22 வயதான மாஷா அம்னி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று, ஹிஜாப் ஆடை அணிவதைக் கண்காணிக்கும் சிறப்புக் காவல் படையினர் கைது செய்தனர். பின்னர் கொடூரமாகத் தாக்கப்பட்ட அப்பெண் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் சிறப்புக் காவல் படையினரே அடக்கம் செய்தனர்.
இச்சம்பவம் நாடும் முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஹிஜாப் ஆடை அணிவதற்கு எதிராகவும், அப்பெண்ணிற்கு நீதி கேட்டும் அங்கு மிகப்பெரிய அளவில் இரண்டு மாதங்களாகப் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஈரான் அரசு, பெண்ணின் மரணத்திற்குக் காரணமான ஹிஜாப் அணிவதைக் கண்காணிக்கும் சிறப்புக் காவல் பிரிவைக் கலைத்தது.
போராட்டங்கள் ஓய்ந்த நிலையில், போராட்டத்தின் போது 488 பேர் பலியானதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற மோஹ்சென் செஹாரி என்ற இளைஞர் போராட்டத்தின் போது போலீசாரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இரண்டு போலீசாரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஜித்ரேசா ரக்னவார்டு என்ற மற்றொரு இளைஞருக்கும் தூக்குத் தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. இச்சம்பவம் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து உரிய விசாரணை ஏதுமின்றி உடனுக்குடன் தூக்குத் தண்டனை விதிப்பதற்கு எதிராக ஈரான் அரசு மீது உலகம் முழுவதிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தங்களது கண்டங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.