முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதினத்தன்று இந்திய ராணுவத்தளபதி இலங்கை அதிபரைச் சந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தினமான மே 18 தமிழகம் முழுவதும் நினைவுதினமாக அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இன உணர்வாளர்களும் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தும் விதமாக கூட்டங்களை நடத்தினர். தமிழ் இன உணர்வாளர்களின் நெஞ்சில் நீங்கா வடுவாய் நிலைத்திருக்கும் இந்த நாளில், இந்திய ராணுவத் தளபதி இலங்கை அதிபரைச் சந்தித்திருக்கிறார்.
இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் ஒன்றுபட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது இலங்கை ராணுவத்தின் லெஃப்டினண்ட் ஜெனரல் மகேஷ் செனநாயகேவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நாளில், இலங்கை ராணுவத்துடன் நல்லுறவு குறித்து இந்திய ராணுவத் தளபதி சந்தித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.