கடந்த 9-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அ.தி.மு.க. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர். அதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3,300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி, "அ.தி.மு.க.வில் இனிமேல் ஸ்லீப்பர் செல் என்பது இல்லை; சிலர் வெளியே வந்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை. அவர் வெளியே வந்தாலும் அவருக்கு ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை; அவர்கள் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. முதுகில் ஏறித்தான் பயணம் செய்ய முடியும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி" என்றார்.
இதற்கு முன்பும், அதிமுக பிரச்சார தொடக்கக் கூட்டத்தில், ''அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதிமுக தலைமை அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். கூட்டணி ஆட்சி அமைக்கலாம் எனக் கூட்டணிக்கு வருபவர்கள் யோசித்துக் கொள்ளுங்கள்'' என கே.பி.முனுசாமி பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. அதுபோல் தமிழக பாஜக தலைமையோ முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடத் தலைமைதான் அறிவிக்கும் எனக் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய பொதுச்செயலாளரும், பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி கூறுகையில், ''தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் அதிமுகவே முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும். தமிழகத்தில் நாங்கள் (பாஜக) சிறுபான்மைதான். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் எங்களை ஆதரிக்கின்றனர். கே.பி.முனுசாமியின் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை'' என்றார்.