இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்த பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வுசெய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பெரும் சர்ச்சையானது.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேநேரத்தில் இந்த ஊடக செய்திகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறிவருகிறது.
பிரான்ஸ் நாட்டின் பத்திரிகையாளர்களைப் பெகாசஸ் மூலம் மொராக்கோ உளவுத்துறை உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக மீடியாபார்ட் என்ற ஊடகம் புகாரளித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ், பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணையைத் துவக்கியுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டிடம் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க அழுத்தம் கொடுத்துள்ளார். நப்தலி பென்னட்டிடம் பேசிய இமானுவேல் மக்ரோன், பெகாசஸ் விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், இந்த (பெகாசஸ் தொடர்பான) குற்றச்சாட்டுகள் நான் பதவி ஏற்பதற்கு முன்பு எழுப்பட்டவை எனவும், இந்த விவகாரத்தில் தேவையான முடிவு விரைவில் எட்டப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். இஸ்ரேல் ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பெகாசஸ் பட்டியலில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் பெயரும் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்த நிலையில், அண்மையில் அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக தொலைபேசி எண்ணை மாற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.