துருக்கியில் நேற்று முன்தினம் அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.நேற்று மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கியில் கடந்த 1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,500 பேர் பலியான நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கப் பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதைவிட அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. துருக்கி, சிரியாவில் மட்டும் நிலநடுக்கப் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 30,000-யை தாண்டும் என உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால மீட்பு அதிகாரி கேத்ரின் ஸ்மால்வுட் தெரிவித்திருந்தார். நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துருக்கியின் பத்து மாகாணங்களில் மூன்று மாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் என துருக்கியின் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதிப்புக்குள்ளான துருக்கி மற்றும் சிரியாவில் தற்பொழுது வரை 11,200 பேருக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் அங்கு நிலவி வருகிறது.