தொண்டு நிறுவனம் வழங்கிய உணவைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கும் மேலான வரிசையில் நின்ற சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் பிரிடோரியா நகரத்தில் அருகாமையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறி கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக இந்த மக்களுக்கு வருமானம் இல்லாத நிலையில், இவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவ தென்னாப்பிரிக்க அரசாங்கம் முன்வரவில்லை. இதனையடுத்து அங்குள்ள தன்னார்வலர் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த மக்களுக்கு உணவு வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அண்மையில் சேவை அமைப்பு ஒன்று அவர்களுக்கு உணவு வழங்கியது. அப்போது அப்பகுதியில் உணவுவேண்டி ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் குவிய ஆரம்பித்தது. சுமார் நான்கு கிலோமீட்டருக்கு மேல் நீளமான வரிசையில் மக்கள் உணவுக்காகக் காத்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உலக அரங்கில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தில், அடித்தட்டு மக்களுக்கு உதவ அரசாங்கங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 5000 க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.