
உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளில் கோடிக் கணக்கில் நிதி முறைகேடு நடந்ததாக கடந்த 2010ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரும், ஐபிஎல் நிறுவனருமான லலித் மோடி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நேரத்தில் அவர் திடீரென்று இந்தியாவில் இருந்து தப்பித்து வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். அவரை நாடு கடத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை எதுவும் பலனளிக்கவில்லை.
லண்டனில் குடியிருந்த லலித் மோடி, அதன் பின்னர் தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடு என்ற சிறிய நாட்டில், பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமை பெற்று அங்கு தங்கியிருந்தார். வனுவாடு நாட்டில் குடியுரிமை பெற்றதை தொடர்ந்து, தனது இந்திய பாஸ்போர்ட்டை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் லலித் மோடி ஒப்படைத்ததாக இந்திய வெளியுறவுத்துறை சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், லலித் மோடிக்கு கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி குடியுரிமை ஆணையத்திற்கு வனுவாடு நாட்டு பிரதமர் ஜோதம் நபாட் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வனுவாடு பிரதமர் ஜோதம் நபாட் தெரிவித்துள்ளதாவது, “லலித் மோடியின் வனுவாடு பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடவடிக்கையை உடனடியாக தொடங்குமாறு குடியுரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். போதுமான நீதித்துறை ஆதாரங்கள் இல்லாததால், லலித் மோடிக்கு எதிராக எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற இந்திய அதிகாரிகளின் கோரிக்கைகளை இன்டர்போல் இரண்டு முறை நிராகரித்திருக்கிறது. அத்தகை எச்சரிக்கை லலித் மோடியின் குடியுரிமை விண்ணப்பத்தில் இருந்திருந்தால் அது தானாகவே நிராகரித்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.