கரோனா பரவல் தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வுத்துறை 12 முறை எச்சரித்தும் அதிபர் ட்ரம்ப் அதனைக் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் அமெரிக்காவைப் புரட்டி போட்டுள்ளது எனலாம். தினமும் ஆயிரக்கணக்கான புதிய பாதிப்புகள், உயிரிழப்புகள் என உச்சக்கட்ட பாதிப்பை எதிர்கொண்டுள்ளது அந்நாடு. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நோயைக் கட்டுப்படுத்துவதைவிட, சீனாவைக் குறைகூறுவது, லாக்டவுனைத் தளர்த்துவதற்குத் திட்டமிடுவது என இதனை வைத்து அரசியல் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கரோனா பரவல் தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வுத்துறை 12 முறை எச்சரித்தும் அதிபர் ட்ரம்ப் அதனைக் கண்டுகொள்ளவில்லை என புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது
கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ கரோனா தொற்று குறித்து 12 முறை எச்சரித்ததாகவும், அதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உதாசீனம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியாகியுள்ள செய்தியில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தினமும் காலையில், கரோனா பரவல் குறித்த தகவல்கள், அமெரிக்காவில் அது பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை அடங்கிய கோப்புகள் அதிபரின் பார்வைக்கு வைக்கப்பட்டும், அதனை ட்ரம்ப் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் குறித்த பல முக்கியத் தகவல்களைச் சீனா மறைத்து வருகிறது என்றும் அமெரிக்க அதிபருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனையும் அவர் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.