
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் கிளிஞ்சல் மேடு என்ற மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த வேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி (26.01.2025) காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் கோடியக்கரை அருகே ஜனவரி 28ஆம் தேதி (28.01.2025) இரவு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அந்த படகில் இருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதோடு மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 காரைக்கால் மீனவர்கள் காயமடைந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்னர் மீனவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமும் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது இத்தகைய சூழலில் தான் 13 மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று (10.03.2025) மல்லாகம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, “இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ. 3.25 லட்சம் அபராதம் செலுத்தினால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். இல்லையெனில் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என உத்தரவிட்டார். இந்த உத்தரவானது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.