உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கு தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் உலக நாடுகள் எடுத்து வருகின்றன. மக்கள் நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியாவில் தற்போது புதிய முயற்சி ஒன்றை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அந்நாட்டில் இந்த கரோனா தொற்றால் இதுவரை 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சரியான முறையில் அரசு அறிவிக்கும் உதவிகள் செல்வதில்லை என்று என்று அந்நாட்டு மக்கள் கூறிவந்த நிலையில், தற்போது அதற்கு ஒரு தீர்வை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. இதன் முதல் கட்டமாக தற்போது ஏடிஎம் இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு அரிசி வழங்கி வருகின்றது. தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த அரிசி ஏடிஎம்கள் நிறுவப்பட்டு ஒருநாளைக்கு 1.5 டன் அரிசி பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகின்றது.