மனித செல்களில் உள்ள கரோனா வைரஸை அழிக்கக்கூடிய தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த ஸ்பாலன்சானி மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ள கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டறியும் பணி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று, இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நப்தாலி பென்னட் தங்கள் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கரோனா சிகிச்சைக்குத் தேவையான முக்கிய தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்த செய்தி வந்தது.
அதனை தொடர்ந்து இத்தாலியின் ரோம் நகரில் செயல்பட்டு வரும் தொற்று நோய் ஸ்பாலன்சானி மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் புதிய தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டறிந்துள்ளதாக அந்த மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். எலிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும், இது மனித செல்களில் உள்ள கரோனா வைரஸை அழிக்கும் திறன் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த மருந்து மனிதர்களுக்கு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், "விஞ்ஞானிகள் தடுப்பூசியைச் சோதிக்க எலிகளைப் பயன்படுத்தினர். முதல் தடுப்பூசிக்குப் பிறகு, எலிகள் கரோனாவுக்கான ஆன்டிபாடிகளை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த ஆன்டிபாடிகள் மனித உயிரணுக்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. ஐந்து எலிகளுக்கு நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சிறந்த முடிவுகளைக் கொடுத்த இரண்டு எலிகளின் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு இன்னும் சிறந்த முடிவுகளை எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.