கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள சூழலில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக 3000 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 1,98,214 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 7,965 ஆக அதிகரித்துள்ளது. மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் இந்த கரோனாவால் சர்வதேச பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பிரிட்டன் அரசு தொழில் நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட வழிகளில் ஊக்கமளிக்கும் வகையில் 330 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்படுவதாக அந்நாட்டு நிதியமைச்சர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். மக்களின் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் உறுதி செய்ய இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.