அமெரிக்க அதிபராக தான் பொறுப்பேற்ற முதல் நாளே அமெரிக்கா, உலக சுகாதார இணையும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பைடன், வரும் ஜனவரி மாதம் அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், தனது சொந்த ஊரான டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பைடன், சீனாவுடனான அமெரிக்காவின் நட்பு, சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றியமைப்பது உள்ளிட்ட பலவற்றைக் குறித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "சீனா நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்தே நடவடிக்கை எடுக்க நான் விரும்புகிறேன். இதன் நோக்கம் சீனாவைத் தண்டிக்க வேண்டும் என்பது அல்ல. சர்வதேச சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைச் சீனா புரிந்து கொள்வதை உறுதி செய்வது ஆகும். இது ஒரு எளிய முன்மொழிவு ஆகும்.
அதேபோல் உலக சுகாதார அமைப்பு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் ஆகியவற்றில் அமெரிக்கா மீண்டும் இணைவது உறுதி. நான் அதிபராகப் பதவி ஏற்கும் முதல் நாளில் மீண்டும் உலக சுகாதார அமைப்பில் நாம் சேரப் போகிறோம். அதேசமயம் அதில் சில சீர்திருத்தங்களும், ஒப்புதல்களும் தேவைப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.