வங்கதேசத்தில் ஏற்பட உள்நாட்டுக் கலவரத்தையடுத்து அந்நாட்டுப் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா நேற்று (05.08.2024) ராஜினாமா செய்தார். மேலும் இந்த பரபரப்பான சூழலில் வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
தற்போது வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் முகமது ஷக்ஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். அதோடு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவையும் விடுதலை செய்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகலுக்குள் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என மாணவர்கள் அமைப்பு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்கதேசத்தின் முன்னாள் அமைச்சர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் அமைச்சரும், அவாமி லீக் தலைவருமான ஜுனைத் அகமது வெளிநாடு தப்பிச்செல்ல முயல்வதாக தகவல்கள் வெளியான நிலையில், டாக்கா விமான நிலையத்தில் வைத்து தற்போது ராணுவத்தால் ஜுனைத் அகமது கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷேக் ஹசீனா நேற்று ஹெலிகாப்டர் மூலம் தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில் இன்று தப்பிக்க முயன்ற முன்னாள் அமைச்சர் விமானநிலையத்தில் வைத்து ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.