கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள 'ஒபெக்' கூட்டத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது ரஷ்யா.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கிப்போயுள்ள சூழலில், சவுதி மற்றும் ரஷ்யா இடையே கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது தொடர்பான முடிவில் தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்ததோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அற்ற சூழலைச் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் தேவையைக் காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது. எனவே இதனைச் சரி செய்யும் விதமாக, சவுதி தலைமையிலான ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது குறித்து ரஷ்யாவுடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் உற்பத்தியைக் குறைப்பதில் சுமுகமான முடிவு எட்டப்படாத சூழலில், கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாகச் சவுதி அறிவித்தது. சவுதிக்கு அடுத்து அதிகப்படியாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ரஷ்யா, ஒபெக் முடிவுக்கு ஒப்புக்கொள்ளாத சூழலில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான சரிவைச் சந்தித்தது கச்சா எண்ணெய்யின் விலை. இந்நிலையில், வியன்னாவில் ஒபெக் அமைப்பு நாடுகளும், ரஷ்ய அதிகாரிகளும் நேற்று காணொலி மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ள ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. சவுதி மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் மே மாதத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 97 லட்சம் கச்சா எண்ணெய் பேரல்கள் உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதாக முடிவெடுத்துள்ளது. அதேபோல மற்ற ஒபெக் நாடுகள் அனைத்தும் சேர்ந்து 3.7 லட்சம் பேரல் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ளச் சம்மதித்துள்ளன.
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த உற்பத்திக் குறைப்பு இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் தாக்கமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர ஆரம்பித்துள்ளது. அதேநேரம், ரஷ்யாவில் கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதால்தான் அந்நாடு இந்த முடிவிற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பரவலாகக் கூறப்படுகிறது.