அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 4500 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், அமெரிக்கா இதனால் மிகமோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை நெருங்கி வரும் சூழலில், அந்நாட்டில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,000 ஐ கடந்துள்ளது.
இதில் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 4500 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் காரணமாக ஒரேநாளில் 2000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்ட முதல் நாடு அமெரிக்காவே ஆகும். அதிகபட்சமாக அமெரிக்காவில் 34,784 பேர் உயிரிழந்துள்ள சூழலில், அதற்கு அடுத்து இத்தாலியில் 22,170 பேரும், ஸ்பெயினில் 19,315 பேரும் பிரான்சில் 17,920 பேரும், பிரிட்டனில் 13,729 பேரும் உயிரிழந்துள்ளனர்.