அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதைத் தற்காலிகமாகத் தடுக்கும் விதமாகப் புதிய திட்டம் கையெழுத்தாக உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் காரணமாக மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பொருளாதார ரீதியிலும் இதனால் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். 2008 ஆம் ஆண்டில் உலகம் எதிர்கொண்ட பொருளாதார மந்தநிலையில் போது ஏற்பட்டதைப் போன்ற ஒரு மிகப்பெரிய நெருக்கடியைத் தற்போது மீண்டும் சந்தித்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில், எதிர்காலத்தில் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், புதிய திட்டம் ஒன்றைத் தயார்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப்.
அதன்படி, அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது வீட்டில், "கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதலிலிருந்து அமெரிக்கக் குடிமக்களின் பணிகளைக் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் குடியேற முயன்று வரும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உள்ளதாகக் கருத்து எழுந்துள்ளது.