Published on 28/04/2020 | Edited on 28/04/2020
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை மீண்டும் அந்நாட்டிற்கே அனுப்ப இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவிற்கு சீனா தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
கரோனா பரிசோதனையை விரைவாக செய்வதற்காக இந்தியா, சீனாவிலிருந்து 5.5 லட்சம் ரேபிட் சோதனை கருவிகளை வாங்கியது. இந்தியா வந்த இந்த கருவியை கொண்டு சில நாட்கள் மக்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆனால் இதில் பெரும்பாலான சோதனை முடிவுகள் தவறாக வருவதாக மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தெரிவித்தன. இதனையடுத்து ரேபிட் சோதனை கருவி பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைத்த ஐசிஎம்ஆர், கருவிகளை ஆய்வு செய்தது.
இதில் அந்த கருவிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது. எனவே, ரேபிட் டெஸ்ட் கருவிகளை திருப்பி அனுப்புமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பியது. மேலும், இந்த கருவிகளை மீண்டும் சீனாவிடம் திரும்பி ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள சீனா, "இந்தியாவின் முடிவு வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய அரசு சரியான முடிவை எடுக்கும் என நம்புகிறோம். சீனா, தான் ஏற்றுமதி செய்யும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் தரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தை முன்வைத்து மொத்த சீன பொருட்களும் தரமற்றவை என்று சிலர் முத்திரை குத்தி வருகிறார்கள். அது பொறுப்பற்ற விளக்கமாக உள்ளது. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.