உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் மற்றும் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. பிரிட்டனிலும் கடந்த ஒருவார காலமாக தினசரி கரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பிரிட்டன் மருத்துவமனைகளில் சுகாதார பணியாளர்களுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக பிரிட்டன் அரசு, சுகாதார பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருத்துவமனைகளில் ராணுவத்தை களமிறக்கியுள்ளது. அதேபோல் கரோனா சோதனை நடத்த உதவவும், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உதவவும் ராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாலும், ஒமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதாலும் புதிய கட்டுப்பாடுகள் இன்றியே இங்கிலாந்து தற்போது ஏற்பட்டுள்ள கரோனா அலையை தாங்கும் என தெரிவித்து வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அடுத்த சில வாரங்கள் சாவல் மிக்கதாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது கவனிக்கத்தக்கது.