உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் பெருமையும் பூரிப்பும் அடையும் அளவிற்கு சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று அமெரிக்காவில் உருவாகியிருக்கிறது. இதை முனைந்து உருவாக்கி இருப்பவர் ‘தமிழ் அமெரிக்கா தொலைக் காட்சியின்’ பங்குதாரர்களில் ஒருவரும், படைப்பாளரும், பெருந்தமிழருமான தாழை இரா.உதயநேசன் ஆவார்.
இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிப் பணிகள், தமிழ் அமர்வுகள், இலக்கண இலக்கிய வகுப்புகள், தமிழ் வகுப்புகள், படைப்பிலக்கியப் பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை நடத்த இருக்கிறது. அதோடு, தமிழின் சிறந்த படைப்பாளர்களைத் துறைவாரியாகத் தேர்வு செய்து, சிறப்பு முனைவர் பட்டங்களையும் இந்தப் பல்கலைக் கழகம் வழங்க இருக்கிறது. இதற்கான அங்கீகாரத்தையும் இந்தப் பல்கலைக் கழகம் பெற்றிருக்கிறது.
இந்தப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக டாக்டர் இரா.உதயநேசனும், துணைவேந்தராக டாக்டர் ஆல்வினும், பதிவாளராக முனைவர் கோ.பாட்டழகனும் இயங்கிவருகின்றனர். அண்மையில் நடந்த பல்கலைக் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வேந்தர் டாக்டர் இரா.உதயநேசன், துணைவேந்தர் டாக்டர் ஆல்வின் மற்றும் கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன், முனைவர் விஜயகுமாரி, முனைவர் சம்பத்குமார், கவிஞர் ரேணுகா ஸ்டாலின், டாக்டர் ஏ.ஜான் இளவரசு, வழக்கறிஞர் பூங்குழலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா, வரும் பிப்ரவரியில் சென்னையில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.