சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதி சூரிய கரோனா என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் நிலவும் ஈர்ப்பு விசை மற்றும் காந்த விசை, சூரிய பொருட்களை வெளியேறவிடாமல் தடுக்கும் அளவிற்கு வலுவாக உள்ளது. இந்தநிலையில், அந்தக் கரோனா பகுதிக்குள் பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலம் நுழைந்து சென்று வரலாறு படைத்துள்ளது. சூரியனின் வளிமண்டலத்தில் ஒரு விண்கலம் நுழைவது இதுவே முதன்முறையாகும்.
பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம், இதுவரை எந்த விண்கலமும் செல்லாத அளவிற்கு சூரியன் அருகில் சென்று, அதனை ஆராய்வதற்காக நாசாவால் கடந்த 2018ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியே நிகழ்ந்த இந்த சரித்திர சம்பவத்தை நாசா தற்போது பகுப்பாய்வு மேற்கொண்டு உறுதி செய்துள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்து பதிவிட்டுள்ள நாசா, நாங்கள் சூரியனைத் தொட்டுவிட்டோம் என தெரிவித்துள்ளது. மேலும் நாசா, "சந்திரனில் தரையிறங்கியது, அது எப்படி உருவானது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவியது போல, சூரியனைத் தொட்டது, நமது நெருங்கிய நட்சத்திரம் பற்றியும், சூரிய குடும்பத்தில் அதன் தாக்கம் பற்றியும் முக்கியமான தகவல்களைக் கண்டறிய விஞ்ஞானிகளுக்கு உதவும்" என கூறியுள்ளது.