காஷ்மீர் விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவிடம் மத்தியஸ்தம் செய்ய உதவி கேட்டார் என டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லை பிரச்சனையை தீர்த்து வைக்க அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாகவும், இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கேட்டுக்கொண்டதற்காக இப்பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய முன்வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். ஆனால் காஷ்மீர் தொடர்பாக அமெரிக்காவிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என இந்தியா சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் பேசியதற்காக இந்திய தூதரிடம் மன்னிப்பு கேட்டதாக அமெரிக்க எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க எம்.பி பிராட் ஷெர்மேன், "தெற்காசியாவின் வெளியுறவுக் கொள்கைகளை பற்றி தெரிந்த யாரும், எந்த நாடும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடாது என்பது அனைவருக்கும் நன்றாகவேத் தெரியும். அதேபோலத்தான் இந்தியப் பிரதமர் மோடியும் அத்தகைய கோரிக்கையை முன்வைத்திருக்கமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதிபர் ட்ரம்பின் கருத்து முதிர்ச்சியற்ற ஒன்று. திரித்துக்கூறப்பட்டது. இது எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் ஸ்ரிங்லாவை தற்போதுதான் சந்தித்து மன்னிப்பு கோரினேன்" என தெரிவித்துள்ளார்.