தமிழக - கர்நாடகா எல்லையான பாலாறு பகுதியில் காரைக்காடு சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச் சாவடியில், காவலர்கள் மற்றும் மதுவிலக்குப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தனியார் பேருந்து மூலம், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு செல்வதற்காக, இந்த சோதனை சாவடி வழியாக வந்துள்ளனர். அப்போது, சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பேருந்து நிறுத்தி சோதனை நடத்தினர். மேலும், கர்நாடகா மாநில சட்டத்துக்கான அனுமதி உரிமம் சீட்டை, அந்த சுற்றுலா பயணிகளிடம் போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு, அனுமதி சீட்டு இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று அந்த உ.பி சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் போலீசாருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால், சுற்றுலா பயணிகள் கடப்பாரையைக் கொண்டு காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனை கண்ட, அங்கிருந்த பொதுமக்கள் சுற்றுலா பயணிகளை தடுக்க முயற்சித்தனர். ஆனாலும், அந்த சுற்றுலா பயணிகள் காவலர்களை தாக்குவதிலேயே குறியாக இருந்ததால், பொதுமக்களும் உ.பி சுற்றுலா பயணிகளை தடியை எடுத்து அடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த குளத்தூர் காவல்துறையினர், விரைந்து வந்து காவலர்களை தாக்கிய சுற்றுலா பயணிகளை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர்களை சுற்றுலா பயணிகள் கடப்பாரையால் தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.