முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (92) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அமெரிக்கா வெள்ளை மாளிகை இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளதாவது, “டாக்டர் மன்மோகன் சிங் அமெரிக்க-இந்தியா இடையேயான நட்புறவில் மிகச் சிறந்த சாதனையாளராக இருந்தார். இரு நாடுகள் இணைந்து சாதித்ததற்கு அவரது பணி அடித்தளமாக அமைந்தது. அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முன்னெடுப்பதில் அவரின் தலைமை, அமெரிக்க-இந்திய உறவின் சாத்தியக்கூறுகளில் ஒரு பெரிய முதலீட்டைக் குறிக்கிறது.
இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிய அவரது பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். அமெரிக்காவையும், இந்தியாவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான அவரது அர்ப்பணிப்பை எப்போதும் நினைவில் கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.