புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடக்கு கிராமம் ராஜாகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மூத்த மகள் சௌமியா(20). இவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் 3 வது வருடம் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(25.12.2024) இரவு வீட்டில் இருந்த சௌமியா திடீரென காணாமல் போய் உள்ளார். அவரது பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்குத் தேடியும் சௌமியா குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த தந்தை ரமேஷ் வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று(27.12.2024) காலை அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற கறம்பக்குடி தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இருந்து சடலத்தை மீட்டனர். அந்த பெண் சடலம் காணாமல் போன சௌமியா என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து சௌமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன நர்சிங் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.