Skip to main content

கனடாவை தொடர்ந்து கிரீன்லாந்து; டொனால்ட் டிரம்ப்பின் அடுத்த குறி!

Published on 24/12/2024 | Edited on 24/12/2024
 Donald Trump's next mark to Greenland

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார். 

அதே வேளையில், கனடா போன்ற நாடுகளை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, ட்வீட்கள் மூலம் தனது விருப்பத்தை டொனால்ட் டிரம்ப் தெரிவித்து வருகிறார். அந்த வகையில், டொனால்ட் டிரம்ப் சில தினங்களுக்கு முன்பு தனது எக்ஸ் பக்கத்தில், ‘கனடாவிற்கு ஆண்டுக்கு 10 கோடி டாலர் மானியம் ஏன் வழங்குகிறோம் என்று யாராலும் பதிலளிக்க முடியாது? பல கனடா மக்கள், கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் வரி மற்றும் இராணுவப் பாதுகாப்பில் பெருமளவில் சேமிப்பார்கள். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில்,  கிரீன்லாந்தை குறிவைக்கும் விதமாக டொனால்ட் டிரம்ப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘தேசத்தின் பாதுகாப்பு மற்றும் உலகம் முழுவதும் விடுதலைக்காக கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவின் கீழ் கொண்டு வருவது தேவை என்று அமெரிக்கா உணர்கிறது’ என்று தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து தன்னாட்சி பெற்ற தீவு என்றாலும், அது இன்னும் டென்மார்க் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக உள்ளது. கடந்த முறை அதிபராக இருந்த போதே, கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியிருந்த டொனால்ட் டிரம்புக்கு, கிரீன்லாந்த் பிரதமர் பதிலளித்திருந்தார். கிரீன்லாந்த் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் , ‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை. கிரீன்லாந்து டேனிஷ் அல்ல. கிரீன்லாந்து கிரீன்லாந்திற்கு சொந்தமானது. இது தீவிரமாக கருதப்படவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்