சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யபிரியா. கல்லூரி மாணவியான இவர் கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞரால் ரயில்வே தண்டவாளத்தில் வந்த ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் மாணவி சத்யபிரியாவை, சதீஷ் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார் எனத் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கில் 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். அதே சமயம் இது தொடர்பான வழக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சதீஷ் இன்று (27-12-24) அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், குற்றவாளி சதீஷ்க்கான தண்டனை விவரம் டிசம்பர் 30ஆம் தேதி வழங்கப்படும் என இந்த வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
சத்யபிரியாவும், சதீஷும் காதலித்த நிலையில், சத்யாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாக அப்போது கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் கைதான சதீஷ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.