பெரு நாட்டின் தலைநகரான லிமாவின் வடக்குக் கடற்கரை பகுதியில் உள்ள மிகப்பெரிய பலியிடும் பீடத்தின் அருகில் 227 குழந்தைகளின் எலும்பு கூடுகளை கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த கடற்கரைக்கு அருகில் உள்ள பம்பா-லா-க்ரூஸ் நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது 56 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக கடந்த ஆண்டில் பம்பா-லா-க்ரூஸில் பலியிடப்பட்ட 140 குழந்தைகள் மற்றும் 200 ஒட்டகங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த கடற்கரை பகுதியில் கண்டறியப்பட்ட பலிபீடத்தில் 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து தலைமை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஃபெரன் காஸ்டிலோ கூறுகையில், "பலியிடப்பட்ட குழந்தைகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய தளம் இது. கடவுள்களை கவுரவிக்கவும், ’எல் நினோ’ நிகழ்வு நடக்காமல் இருக்க இயற்கையை சமாதானப்படுத்தவும் 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பலியிடப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.
மேலும் கி.பி.1200-1475 ஆம் ஆண்டுவரை பெரு நாட்டில் நிலவி வந்த சிமு நாகரீகத்தில்தான் இந்த பலியிடல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.