ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள் அங்கு தங்களின் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களில் பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்த தலிபான்கள் பெண் பத்திரிகையாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இவ்வாறு தலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியது உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்றது.
தொடர்ந்து ஆப்கனில் தலிபான்கள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில், தற்பொழுது முதல்முறையாக தாலிபான்களின் உத்தரவின் பேரில் நவீன கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. காபூலில் உள்ள 'ஆப்கானிஸ்தான் டெக்கினிக்கல் வெகேஷனல்' நிறுவனத்தில் 30 பேர் கொண்ட இன்ஜினியர் குழு இந்த காரை வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானால் தயாரிக்கப்பட்ட முதல் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. காரை சுற்றி நின்று தலிபான்கள் பெருமை பேசிக்கொள்ளும் காட்சிகள், புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.