சீனாவில் இந்திய ஊடகங்களின் இணையதளங்கள் தடைசெய்யப்பட்ட நிலையில், அதனைப்போலவே நேபாளத்திலும் இந்திய செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் சில பகுதிகளைத் தங்களது எல்லைக்குள் சேர்த்து நேபாளம் புதிய வரைபடம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பிரச்சனையை மனதில் வைத்து இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்வதாக நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி குற்றம் சாட்டினார். இந்நிலையில், அவரது சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக குரலெழுப்ப ஆரம்பித்துள்ள நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அவரது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய செய்திகளை நேபாளத்தில் ஒளிபரப்படுவதை தவிர்க்கும் வகையில், தூர்தர்ஷனை தவிர, இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களின் ஒளிபரப்பும் அந்நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாத சூழலிலும், நேபாளத்தின் கேபிள் தொலைக்காட்சி வழங்குநர்கள், தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து இந்திய செய்தி சேனல்களுக்கான சிக்னலையும் ப்ளாக் செய்துள்ளனர்.