தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 23 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலுக்கு இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.
ஆரம்பம் முதலே கரோனா தடுப்பில் அலட்சியம் காட்டிவந்த அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனோரோ, ஊரடங்கு உள்ளிட்ட எந்தவித தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் தீவிரம் காட்டவில்லை. இதனையடுத்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பெரும் பாதிப்புக்கு பின்னர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் போல்சனாரோவுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். ஆனால், வீட்டில் தன்னால் தனித்திருக்க முடியவில்லை எனக்கூறிய போல்சனோரோ, சில நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கரோனா பரிசோதனையை மேற்கொண்டார். இரண்டாவது மருத்துவப் பரிசோதனையின் முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது. இந்நிலையில், தற்போது அவருக்கு கரோனா பாதிப்பு குணமாகி வீடு திரும்பியுள்ளார்.