கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்புக்கு அல்கொய்தா அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் அதிகாரம் செய்துவந்த தலிபான் அமைப்பு அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டு ஜனநாயக முறையில் ஆட்சியமைக்கப்பட்டது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை இழந்த பிறகும், அந்நாட்டு அரசுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஆண்டு தோறும் தலிபான் நடத்தும் இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு அந்நாட்டு ராணுவமும் தொடர்ந்து பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் காந்தகார் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு வெடிகுண்டு தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 41 பேர் பலியாகினர்.
அதேபோல உருஸ்கான் மாகாணத்தில் நடத்திய தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கடந்த 24 மணிநேரத்தில் மூன்று தாக்குதலில் 76 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.